முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 பட்ஜெட் குறித்து ஆலோசனை: மாநில நிதியமைச்சர்களை இன்று சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      இந்தியா
Nirmalaa-Seetharaman

Source: provided

புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில் மாநில நிதியமைச்சர்களை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

2023ம் வருட பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.

இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் துரித நடவடிக்கைகள் தேவை என கருதப்படுகிறது. மேலும் 2024ம் வருடத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும். ஆகவே அடுத்த வருட நிதிநிலை அறிக்கை பொது தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட் ஆக மத்திய அரசுக்கு வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த வருட பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாநில நிதி அமைச்சர்களை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். தமிழக அரசு சார்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் தொடர்பான ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது எனவும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் முதல்வர்களே நிதி துறையை தங்கள் பொறுப்பில் வைத்திருப்பதால், அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதிகளாக முதலமைச்சர்களே ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

அடுத்த வருடம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற திங்கட்கிழமை தொடங்கினார். அதற்கு முன்னரே நிதி அமைச்சக அதிகாரிகள் பட்ஜெட் பணிகள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களை திரட்டி ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து