முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம் கேட்டால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தமிழக மின்வாரியம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Power 2022 10 13

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆதாரை பதிவு செய்ய...

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மீண்டும் அறிவிப்பு...

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

சிறப்பு முகாம்கள்...

இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 லட்சம் பேர்...

அப்போது அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில், 1.15 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின் வாரியத்தில் உள்ளது. இதன் பிறகு இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.

அறிவுறுத்தல்கள்...

ஆனாலும் சில மையங்களில் 'சர்வர்' பிரச்சினை காரணமாக ஆதாரை இணைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட கியூவில் காத்திருந்து ஆதாரை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரை இணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் என்னென்ன வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரிவு மண்டல பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.,

  • * ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். 
  • * ஆதார் புதுப்பிப்பு பணிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • * தேவைப்பட்டால் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.
  • * ஆதார் இணைப்பை விளக்குவதற்கும், அதை செய்து கொடுப்பதற்கும் தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.
  • * கம்ப்யூட்டரில் சர்வர் கோளாறு ஏற்பட்டாலோ மெதுவாக இயங்கினாலோ அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
  • * தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் இணைக்கும் பணி பாதிக்கப்படக்கூடாது.
  • * தேசிய விடுமுறை மற்றும் விழா நாட்களை தவிர ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட வேண்டும். டீ பிரேக், மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
  • * மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிக்க கூடாது. லஞ்சம் கேட்கக் கூடாது. யாராவது பணம் வாங்கியதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
  • * மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதாரை இணைக்கும் பணி முன்னேற்றத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
  • * மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பிளக்ஸ் பேனர் வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து