முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு கலெக்டர் ஆலோசனை : தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 25 வழக்குகள் பதிவு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      தமிழகம்
Electronic-machine 2023 01

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார்.

ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விடுமுறைகள் குறித்து கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். வேறு உங்கள் தரப்பில் இடம் அடையாளம் காணப்பட்டு இருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் யார்? யார்? வருவார்கள். எத்தனை பேர்? வருவார்கள். வாகன எண் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் எந்த பகுதியில் நடத்துகிறார்களோ அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் ஊர்வலம் தொடங்கி எந்த வழியாக ஊர்வலம் வந்து நிறைவடைகிறது என்பது குறித்த விவரங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

அரசியல் கட்சியினர் கார்களில் கட்சி சின்னம் கொடிகளை பொருத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். கட்சிக்கொடிகளை அகற்றுவது, பதாகை, பேனர்களை முறையாக மூடாமல் இருப்பது இது போன்றது தொடர்பாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 வழக்குகள், வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வழக்குகள், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 வழக்குகள் என மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து