முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
OPS 2022 12 22

Source: provided

சென்னை : நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏழை, எளிய மக்களுக்காக, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் 1983-ம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது.  பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு  வேட்டி-சேலைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தன.  ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் கடந்தும் நியாய விலைக் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை வழங்கப்படாதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலேயே இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத்  திட்டம் எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். 

பொங்கல் பண்டிகையே முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது.  இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிற்கு இருக்கிறது. 

எனவே, முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து