முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் இறுதிச்சுற்றில் இன்று மோதல்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      விளையாட்டு
Germany-Belgium 2023 01 28

Source: provided

புவனேஷ்வர் : எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றில் ஜெர்மனி- பெல்ஜிய அணிகள் இன்று மோதுகின்றன. வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸி., முன்னிலை...

புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை 4-3 என வீழ்த்தியது ஜெர்மனி. இரண்டாவது அரையிறுதியில் நெதர்லாந்தை 3-2 என பெல்ஜியம் வீழ்த்தியது. மூன்று முறை சாம்பியன் ஆஸி.யுடன்-இரு முறை சாம்பியன் ஜெர்மனி தொடக்கம் முதலே ஈடுகொடுத்து ஆடியது. ஆட்டம் தொடங்கியவுடன் ஆஸி. அணி வீரர்கள் ஜெரேமி ஹேவர்ட் 12, நாதன் எஃப்ராம்ஸ் 27-ஆவது நிமிஷங்களில் அபாரமாக கோலடித்தனர். இதனால் 2-0 என ஆஸி. முன்னிலை பெற்றது.

பெய்லட் ஹாட்ரிக்...

இரண்டாம் பாதியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடிய நிலையில், அதன் நட்சத்திர வீரர்கோன்ஸாலோ பெய்லட் 43, 52, 59-ஆவது நிமிஷங்களில் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமாக ஹாட்ரிக் கோலடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸி அணி தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தியதன் பலனாக 58-ஆவது நிமிஷத்தில் பிளேக் குரோவர்ஸ் கோலடித்தார். 3-3 என சமநிலையில் இருந்த நிலையில், ஆட்டம் முடிய கடைசி 60-ஆவது நிமிஷத்தில் ஜெர்மனி வீரர் நிக்கிலாஸ் வெல்லென் அற்புதமாக கோலடித்து தனது அணி 4-3 என வெல்ல உதவினார்.

13 ஆண்டுகளுக்கு...

இங்கிலாந்துக்கு எதிராகவும் 0-2 என பின்தங்கி பின் வென்ற, ஜெர்மனி, தற்போது இரண்டாவது முறையாக 0-2 என பின்தங்கி இருந்து வென்றுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின் இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது ஜெர்மனி. டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோற்ற்கு தற்போது ஆஸி.யை பழி தீர்த்துக் கொண்டது.

2-வது அரையிறுதி...

இரண்டாவது அரையிறுதியில் நெதர்லாந்து-நடப்பு சாம்பியன் பெல்ஜியம் மோதின. ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம்-ஜெர்மனி இடையே இறுதி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. வெண்கல பதக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து