முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      உலகம்
China 2023 02 01

Source: provided

பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பணக்கட்டுகளை குவித்து, தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சூழலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெனன் மைன்,  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் அதே வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 

இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப் போன நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க முடிவு செய்து, அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 73 கோடியே 81 லட்சம்) மதிப்புடைய பணக்கட்டுகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டது. 

அதில் இருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 6 கோடி) போனசாக வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ. 1.20 கோடி) வழங்கப்பட்டது. 

இது தவிர நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மலைபோல் பணக்கட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், ஊழியர்கள் 2 பேர் கை நிறைய பணக்கட்டுகளை அள்ளி செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து