முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச திருவிழா: வடலூரில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Vadalore 2023 01 29

Source: provided

வடலூர் : வடலூர் சத்தியஞானசபையில் 152-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு 152-வது ஆண்டு தைப்பூச விழாவாக நேற்று நடைபெற்றது. இதன் தொடக்கமாக ஜனவரி 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஒதப்பட்டது. 

ஜனவரி 31-ம் தேதி முதல் கடந்த 3-ம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் (4-ம்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங் குழியிலும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது. ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.

சத்தியஞான சபையில் நேற்று (5-ம் தேதி) காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.  தொடர்ந்து 10 மணி, பகல் ஒரு மணி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.  தரிசனத்தின் போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஒலித்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணி, 10மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து