முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      இந்தியா
Supreme 20221 02 02

Source: provided

புதுடெல்லி : விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நேற்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார். 

விசாரணையின்போது, தானே மாணவனாக இருந்த போது அரசியல் கட்சித் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்று நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது. நீதிபதிகளை அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் பின்தொடர முடியாது. அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே, நீதிபதியாக கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, 10.35 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக்கொள்ளவிருந்த நிலையில், 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் சிலர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் திங்கள்கிழமை முறையிட்டார். இதையடுத்து, நேற்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து