முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு நோட்டீஸ்: ராகுலின் வீட்டிற்கு சென்ற போலீசார்: போராட்டம் நடத்திய காங்கிரசார் கைது

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
Rahul 2023-03-01

Source: provided

புதுடெல்லி : ஒற்றுமை பயணத்தின் போது பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு நோட்டீஸ் வழங்கிய போலீசார் அது தொடர்பான விவரங்களை அளிக்க கோரி நேற்று ராகுலின் வீட்டிற்கு சென்றனர். இதையறிந்து அங்கு கூடி கோஷம் எழுப்பிய காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். 

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரையை கடந்த செப்டம்பர்  7-ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ம்  தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார். 

காஷ்மீரில் அவர் பேசும் போது இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியானது. 

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினர். 

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல் காந்தியிடம் போலீசார் கேட்டனர். 

ராகுல் வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து