முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் தவற விட்ட மொபைல் போனுக்காக அணையில் இருந்த நீரை வெளியேற்றிய அதிகாரி

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      இந்தியா
Mobile-Phone

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அணை ஒன்றில் தவறவிட்ட தனது மொபைல் போனை தேடி எடுக்க விவசாய பாசனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 41 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார். அணையில் இருந்த நீரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெளியேற்றிய பின்னர் அந்த அதிகாரி தனது போனை கண்டெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் கெர்கட்டா அணையில் நடைபெற்றுள்ளது. 

கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபெடா வட்டத்தில் உணவு அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் விஸ்வாஸ். அவர் கடந்த ஞாயிறு அன்று தனது விடுமுறையை கழிக்க கெர்கட்டா அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனது மொபைல் போனை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரில் தவறவிட்டுள்ளார். அந்த போனின் விலை ரூ.96,000. செல்பி எடுக்க முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அணையில் 15 அடி அளவிற்கு நீர் இருந்துள்ளது.

இது தொடர்பாக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் அவர் பேசி உள்ளார். தனது போனில் முக்கிய அரசு தரவுகள் இருப்பதாகவும், அதனால் போனை எப்படியேனும் மீட்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து 30 ஹார்ஸ்பவர் கொண்ட என்ஜின் பம்ப் மூலம் அதில் பிடித்து வைக்கப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. மொத்தம் 41 லட்சம் லிட்டர் அளவிலான நீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு பக்கத்தில் இருந்த பாசன கால்வாயில் அந்த நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

கடந்த திங்கள் மாலை நீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. வியாழன் அன்றுதான் அந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த அணையில் இருந்து பாசனம் பெற்று வருகிறது. தொடர்ந்து ராஜேஷ் விஸ்வாஸ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் பாசனத்திற்கு முற்றிலும் பயன்படுத்த உகந்த வகையில் இல்லாதது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேடி எடுக்கப்பட்ட விஸ்வாஸின் போன், நீருக்குள் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் இயங்கவில்லை எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து