முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த ரத்து: வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு : ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணையை செலுத்தவும் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
Periyasamy 2023-09-02

Source: provided

சென்னை : வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை (நேற்று) தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்குள் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.

வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28-ம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும். தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து