முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி : 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து அவர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், ஐகோர்ட்டும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 14, 15 மற்றும் 21-ம் தேதிகளில் நடந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். அமைச்சராக இல்லை. அதனால் சாட்சியங்களை கலைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் கடந்த பிப்.21-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நேற்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். 

அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனினும், செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து