முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      ஆன்மிகம்
Tiruparangunram 2024-03-29

Source: provided

மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு முருகப் பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் முருகப் பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். 

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர். இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்.  அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். 

விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். 

தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து