முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று முதல் 3 நாட்களுக்கு (19-ம் தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. நேற்று கடைசி நாள் பிரச்சாரம் நடைபெற்றதையொட்டியும், நாளை தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். நேற்று முதல் 3 நாட்களும் மதுகுடிக்க முடியாது என்பதால் பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி  இருப்பு வைத்தனர். 

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் இரண்டரை மடங்கு அளவுக்கு நேற்று முன்தினம் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் கூறும் போது, 

சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார். நேற்று  முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ம் தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். 

இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து