முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Meenakshiyamman 2024-03-19

மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 

சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களைகட்டியுள்ளது. விழாவின் 6-வது நாளான நேற்று முன்தினம் இரவு தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 

அதை தொடர்ந்து 7-ம் நாளான நேற்று காலை தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

8-ம் நாளான இன்று காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி, அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.

 சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.

மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து