முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், இரண்டு முன்னாள் முதல்வர்கள் போட்டி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
Election 2024-03-29

சென்னை, இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் முன்னாள் கவர்னர், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.  

நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக  21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.19) நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் முன்னாள் கவர்னர்,  8 மத்திய அமைச்சர்கள்,  2 முன்னாள் முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.

அதன்படி,  தெலங்கானா கவர்னராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநகராகவும் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன்,  தனது பதவிகளை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார். பாஜக அவரை தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து,  தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசாவும்,  தற்போதைய மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி-யுமான எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் தொகுதியில் 3-வது முறையாக மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.  அவர் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 7 முறை எம்.பி-யாக இருந்த விலாஸ் முத்தேம்வாரை எதிர்த்து போட்டியிட்டு 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  அதேபோல் நிதின் கட்கரி கடந்த 2019 தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேயைவிட 2.16 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

அருணாசல பிரதேசத்தின் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு,  இந்தத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர்.  அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நாவம் துகி போட்டியிடுகிறார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும்,  தற்போதைய எம்.பியுமான சர்வானந்த சோனோவால் அசாமின் திப்ரூகர் தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியான் போட்டியிடுகிறார்.  இவரை எதிர்த்து,  சமாஜவாதியின் ஹரீந்திர மாலிக் போட்டியிடுகிறார்.  இவர்களுடன் பகுஜன் சமாஜ் வேட்பாளர் தாரா சிங் பிரஜபதியும் களத்தில் உள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ள ஜிதேந்திர சிங்,  ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் 3வது முறையாக களமிறங்குகிறார்.  இவர் 2 முறை எம்.பியாக இருந்துள்ளார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் ஆல்வார் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ லலித் யாதவ் போட்டியிடுகிறார். அதேபோல் ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் போட்டியிடுகிறார்.   அவரை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வால் போட்டியிடுகிறார்.

திரிபுராவில் உள்ள இரு தொகுதிகளில் மேற்கு திரிபுரா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தொகுதியில்,  பாஜக சார்பில் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விப்லவ் குமார் தேவ் போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆசிஷ்குமார் சாஹா களத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து