முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      இந்தியா
Amit-Shah 2024-04-19

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, குஜராத் முதல்வர்  பூபேந்திர படேல் உடன் இருந்தார். 

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, 

காந்திநகர் தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எல்.கே. அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி இது. அதோடு, நரேந்திர மோடி வாக்காளராக உள்ள தொகுதி இது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. 

காந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் 30 ஆண்டுகள் இருந்துள்ளேன். காந்திநகர் தொகுதி மக்கள் எனக்கு அளப்பரிய அன்பை வழங்கி இருக்கிறார்கள். இங்கு பூத் அளவிலான பணியாளராக நான் இருந்திருக்கிறேன். 

தற்போது இந்த தொகுதியின் வேட்பாளர். காந்திநகர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். இந்த தேர்தலில், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியைத் தந்து நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க ஒட்டுமொத்த நாடும் உற்சாகத்துடன் உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. நாட்டு மக்கள் கொடுத்த 10 வருடங்கள் யு.பி.ஐ. அரசாங்கம் ஏற்படுத்திய குழிகளை நிரப்பவே செலவழிக்கப்பட்டது. இந்த 5 வருடங்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தைக் கட்டமைக்க அடித்தளம் அமைக்கும் ஆண்டாக இருக்கும். தாமரை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் எங்கும் மலரும். 400 இடங்களைக் கடக்கும் என்று கூறினார்.

குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2019 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களில் 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து