முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிச்சடங்கிற்கு சென்ற போது சோகம்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 58 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      உலகம்
Bankui 2024-04-21

Source: provided

பாங்குயி : கிராம தலைவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டின் தலைநகர் பாங்குயி நகரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள மாகோலோ கிராமத்தின் தலைவர் மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மபோகோ ஆற்றை கடந்து மறுபுறம் செல்வதற்காக நேற்று முன்தினம் ஒரு படகில் சென்றனர். 

இரண்டு அடுக்கு கொண்ட மிகப்பெரிய மரப்படகில் 300-க்கும் மேற்பட்டோர் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாரம் தாங்காமல் படகு தள்ளாடத் தொடங்கியது. எனினும் தொடர்ந்து படகை செலுத்தி உள்ளனர். 

ஒரு கட்டத்தில் படகின் மேற்பகுதி திடீரென உடைந்தது. இதனால் அதில் நின்றிருந்தவர்கள் படகிற்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். படகும் நிலைதடுமாறி கவிழ்ந்தது. படகின் ஓரமாக இருந்தவர்கள், மரக்கட்டையில் அமர்ந்திருந்தவர்கள் வெளியே குதித்து நீந்தி கரையை நோக்கி வந்தனர். 

படகு கவிழ்ந்ததை கவனித்த பிற படகோட்டிகள் மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசின் அவசரகால மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்தவர்களில் 58 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 

பாதிக்கப்பட்ட சிலரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீருக்கடியில் மேலும் பலர் இறந்து கிடக்கலாம், ஆனால், மொத்த எண்ணிக்கை தெரியவில்லை என்று சிவில் பாதுகாப்பு குழு தலைவர் கூறியுள்ளார். 

படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவி வழங்கப்படும் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து