முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மசாலாக்களுக்கு தடை விதித்த நேபாளம்

சனிக்கிழமை, 18 மே 2024      உலகம்
Nepal 2024-05-18

Source: provided

காத்மாண்டு : இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்தக் குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான மசாலாக்களுக்குத் தடை விதித்துள்ளதாக நேபாளம் நாட்டின் உணவு தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எம்.டி.ஹெச். நிறுவனத்தின் மெட்ராஸ் கறி பவுடர், சாம்பார் மிக்ஸட் மசாலா பவுடர், மிக்ஸட் மசாலா கறி பவுடர் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகியவற்றை நேபாளம் தடை செய்துள்ளது.

இந்த நான்கு மசாலாக்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் இருப்பதால், பிரிவு 19 உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2027 பி.எஸ்-ன் படி அதன் இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்துள்ளதாக அந்த நாட்டின் உணவு தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘சந்தையில் இதுபோன்ற தரமற்ற தயாரிப்புகள் விற்பனையாவது குறித்து ஊடகங்களின் செய்தியைத் தொடர்ந்து, அவற்றை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் தீமைகளைக் கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களை சந்தையிலிருந்துத் திரும்பப் பெருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறை கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பல்வேறு இந்திய நிறுவனங்களுடைய மசாலா பொருள்களின் தரத்தினை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலகளவில் மசாலா தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள இந்தியா, கடந்த 2021-2022 ல் மட்டும் 180 நாடுகளுக்கு 200-க்கும் மேற்பட்ட மசாலா மற்றும் இதர பொருள்களை ரூ. 400 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளதாக இந்திய மசாலா வாரியம் தெரிவித்துள்ளது

எத்திலின் ஆக்ஸைடு பயன்பாட்டை மசாலாக்களில் அதிகளவு உபயோகப்படுத்துவது குறித்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மசாலா பொருள்களின் ஏற்றுமதி 40 சதவீதம் அளவு குறைந்துவிடும் என்று 'இந்திய மசாலா பங்குதாரர்களின் கூட்டமைப்பு’ (எஃப்.ஐ.எஸ்.எஸ்) கூறியுள்ளது. கடந்த மாதம், சிங்கப்பூர், ஹாங்காங்கில் எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்ஸைடு அதிகளவில் இருப்பதால் அவை தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து