முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ளுறை பயிற்சிக்கான அனுமதி: மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
MBBS

சென்னை, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தின் 38 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை மேலும் இரு ஆண்டு காலத்துக்கு நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் கடந்த ஆண்டில் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த இடங்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோர் இருப்பதால் அந்த இடங்களை அதிகரிக்குமாறு மாநில மருத்துவ கவுன்சில்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி அல்லாத மருத்துவமனைகளில் அவர்களுக்கு உள்ளுறை பயிற்சி வழங்க தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆண்டில் அனுமதி வழங்கியது.

தமிழகத்தில் 38 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரியில் இரு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற ஓராண்டுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று அந்த மருத்துவமனைகளில் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி வழங்க மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டித்து 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை அனுமதி வழங்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் டாக்டர் சாம்பு சரண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து