முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
SP-Velumani 2023-09-30

Source: provided

சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில்  16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. 

அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற முடியாத தி.மு.க. அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில், 

சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். 

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும், கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தற்போது கேரளாவில் நடப்பது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து