முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்ஸ் திரைப்பட விழா: உயரி விருதை வென்றார் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      உலகம்
Knes 2024-05-26

Source: provided

பாரிஸ் : கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சந்தோஷ் சிவன். 1986-ல் நிதியுடே கதா என்கிற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தி டெரரிஸ்ட், உருமி, மல்லி, மும்பைக்கார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இதுவரை 12 தேசிய விருதுகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியவர். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, இருவர், ராவணன், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இந்தப் படங்களின் வெற்றியில் பெரும் பங்காற்றியவர்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, 2024 ஆம் ஆண்டிற்காக சந்தோஷ் சிவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சந்தோஷ் சிவனுக்கு வழங்கினார். விருதைப் பெற்ற சந்தோஷ் சிவன், “இந்த விருதிற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், முதலில் கேரளத்திற்கு தெரிவிக்கிறேன். மலையாள சினிமாதான் எனக்கு ஒளிப்பதிவில் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தது. நிச்சயமாக, ஒளிப்பதிவுக்கு மொழியே தேவையில்லை. அதனால்தான், தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் மொழிகளில் என்னால் பணியாற்ற முடிந்தது. இந்தத் துறையின் சிறப்பே இதற்கு எல்லைகளே இல்லை என்பதுதான்.

ஜப்பான் புகைப்பட கலைஞர்களால் அழைக்கப்பட்டபோது அவர்களுடன் 15 நாள்கள் இருந்தேன். நான் கிளம்பும்போது 'சைய்ய.. சைய்ய..’ (உயிரே - மணிரத்னம்) பாடலை பாடி விடைகொடுத்தனர். நான் நல்ல கணவனாக இருந்ததில்லை. காரணம், எப்போதும் திரைப்பட பணிகளிலேயே இருக்கிறேன். இம்முறை, என் மனைவி மற்றும் மகன் இங்கு இருக்கிறார்கள். இந்த விருதிற்காக அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நன்றி” எனத் தெரிவித்தார். இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். ஆசியாவிலிருந்து இவ்விருதைப் பெறும் முதல் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை அடைந்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து