முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, தி.மு.க. அரசின் அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைவரும் அறிவர்...

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., “பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அ.தி.மு.க. தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அ.தி.மு.க. அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க.வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

கடந்த காலங்களில்.... 

தி.மு.க. என்றால் அராஜகம். தி.மு.க.வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

தி.மு.க.வினரால்... 

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 2006-ல், மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க.வினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள்; தமிழகமெங்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டது; தேர்தல் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டது; அ.தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் தேர்தல் அதிகாரியை அச்சுறுத்தி, மிரட்டி, தி.மு.க. தான் வெற்றி பெற்றது என்று அறிவிக்கச் செய்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

ஜனநாயக முறைப்படி... 

அதே போல், 19.2.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் பணபலம், படைபலத்துடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களையும், வன்முறைகளையும், அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் தி.மு.க. கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த தி.மு.க., ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்தது.

ஈரோடு ஃபார்முலா... 

திருமங்கலம் ஃபார்முலா என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல், வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது. எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவுக்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். `மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்துக்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்த பிறகு, பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது தி.மு.க..

மிரட்டப்பட்டார்கள்...

அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க.வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. தி.மு.க.வின் மக்கள் அடைப்பு முகாம்கள் ஈரோடு (கிழக்கு) தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்துக்கு வர மறுத்த அப்பாவி மக்கள் தி.மு.க.வினரால் மிரட்டப்பட்டார்கள். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டடிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவும், வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி ஜனநாயகப் படுகொலை நடந்தேறியது.

நடவடிக்கை இல்லை...

தி.மு.க.வினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் (மாவட்ட ஆட்சித் தலைவர்), சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் பலமுறை நேரில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும், ஆளும் கட்சிக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது. அந்த வகையில், தி.மு.க. ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.

புறக்கணிக்க முடிவு...

தி.மு.க. அரசின் அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து