முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க.தலைவர் விஜய் பேசுகிறார்: 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      தமிழகம்
vijay 2025-01-17

புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். இதில் 10 ஆயிரம் பேர் மட்டுமே  அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரளாக மக்கள் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.

3-வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அலைகடலென த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் பக்கத்து மாநிலமான புதுவையில் நடைபெறுகிறது. புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுவை போலீசார் ரோடு-ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான அனுமதியை கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து விஜய்யின் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், முதல்வர்  ரங்கசாமியை சந்தித்து, துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் பொதுக்கூட்டம் நடத்த வழங்கும்படியும், 10 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கும்படியும் கோரினார். இதைத் தொடர்ந்து த.வெ. க.வின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து துறைமுக வளாகம் முழுவதும் தண்ணீரை வெளியேற்றி சமன் செய்யும் பணி தொடங்கி உள்ளது. டிராக்டர்கள் மூலம் மணல் கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் துறைமுக வளாகம் தண்ணீர் தேங்காதவாறு சமன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் மேடையும், தொண்டர்களை பார்ப்பதற்காக, நடந்து வந்து செல்வதற்கு பாதையும் அமைக்கப்படும். ஆனால் புதுவை பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக விஜய் பிரசார வாகனத்தில் இருந்தே பேச உள்ளார். இதற்காக வருகிற 8-ந்தேதி இரவு பிரசார வாகனம் புதுவைக்கு வருகிறது. துறைமுக வளாகத்தில் ஹெலிபேடு தளத்தில் வாகனம் நிறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பகுதியிலும் தொண்டர்கள் நின்றபடியே விஜய் பேச்சை கேட்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கியூ.ஆர்.கோடுடன் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். 1000 பேர் நிற்பதற்கு ஒரு பாக்ஸ் என 10 பாக்ஸ் தடுப்பு கட்டைகளுடன் அமைக்கப்பட உள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்த தனிபகுதி ஒதுக்கப்படுகிறது. தற்போது துறைமுக வளாகத்தின் நுழைவுக்கு ஒரு வாசல் மட்டுமே உள்ளது. கூட்டம் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வசதியாக மேலும் 2 வாசல்கள் காம்பவுண்ட் சுவரை உடைத்து அமைக்கப்பட உள்ளது. 9-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க. தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வரைபடத்துடன் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மாதத்துக்கு பிறகு புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து