முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி. தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் கவர்னரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டு இருக்கும். சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.

கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அனேகமாக, வரும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. அதே நேரத்தில், இன்றைய கூட்டத்தில் கவர்னர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன் பிறகு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. 2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், கவர்னர் பாதியிலேயே வெளியேறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, இன்றைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்பது இன்று தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து