முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். அணிகளுக்கு கூட்டாக சாம்பியன் பட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜுலை - 2 - இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி டையில் முடிவடைந்ததால் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. நேற்று கின்ராரா அக்கடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் உன்முக்த்சந்த், பாகிஸ்தான் அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து துவக்க ஆட்டக்காரர்கள் சமி அஸ்லாம் மற்றும் கேப்டன் பாபர் ஆஸம் ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமான துவங்கிய பாகிஸ்தான் அணியின் 10.2 ஓவர்களில் 33 ரன்களை எடுத்திருந்தபோது அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ரன் அவுட் முறையில் 10 ரன்களை மட்டும் எடுத்து அவுட்டானார். இதையடுத்து இமாம் உல் ஹக் களமிறங்கினார். இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 10 ரன்களை எடுத்த நிலையில் அபராஜித் பந்தில் கீப்பர் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானால் ஹக். அடுத்து களமிறங்கிய உமர் வாஹித் துவக்க வீரர் சமி அஸ்லாமுடன் இணைந்து அதிரடியாக ரன் குவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் எகிறியது. 31.5 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்தபோது உமர் வாஹித் 48 ரன்கள் எடுத்த நிலையில்  விகாஸ் மிஸ்ராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாத் அலியும் துவக்க வீரர் சமி அஸ்லாமுடன் அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களை குவித்தது. துவக்க வீரர் சமி அஸ்லாம் 124 பந்துகளில் 134 ரன்களை குவித்தார். இந்தியத் தரப்பில் கலாரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை சேஸ் செய்த இந்திய அணி துவக்க வீரர் வோரா விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்தாலும் மற்றொரு துவக்க வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான உன்முக்த் சந்த் மற்றும் அபராஜித் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். இந்திய அணி 36.3 ஓவர்களில் 195 ரன்களை சேர்த்திருந்தபோது 90 ரன்களை எடுத்திருந்த அபராஜித், முகம்மது நவாஸ் பந்தில் ஜியா உல் ஹக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் மறுமுனையில் இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சாந்த் அபாரமாக விளையாடி ரன் வேட்டை நடத்தினார். தளராமல் போராடிய சந்த் 121 ரன்கள் எடுத்திருந்தபோது எக்சான் அலி பந்தில் அஜிஜுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  இவர் அவுட்டானதை அடுத்து பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. இருப்பினும் இந்திய வீரர்கள் விக்கெட்டை காப்பாற்ற விளையாடியதால் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 282 ரன்களை மட்டும் எடுத்தது.  கடைசி 5 ஓவர்களை பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக வீசி இந்திய அணியின்  வெற்றிவாய்ப்பை தட்டிப் பறித்தது. போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது. இதையடுத்து ஆசிய கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. 

ஆட்ட நாயகனாக இந்திய வீரர் உன்முக்த் சந்த் மற்றும் பாகிஸ்தான் வீரர் சமி அஸ்லாம் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர் நாயகன் விருதை பாக் வீரர் சமி அஸ்லாமே பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தரிண்டு கெளசல் பெற்றார். இவர் இத்தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்