முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி மகன் நிறுவனம் அடித்த கிரானைட் கொள்ளை அம்பலம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      வர்த்தகம்
Image Unavailable

மதுரை, ஆக.7 - தி.மு.க. ஆட்சியில் டாமின் சுரங்கத்தில் மு.க.அழகிரி மகனின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொள்ளை அடித்துள்ளது.  வீடியோ ஆதாரத்துடன் திருட்டு அம்பலம் ஆகி உள்ளது. மு.க.அழகிரி மகன் தயாநிதிஅழகிரி ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனத்தின் இயக்குனராக தயாநிதி அழகிரி மற்றும் ந.நாகராஜன் ஆகிய இருவரும் இருந்தனர். இந்த நிறுவனம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவு கிராமத்தில் பொக்கிஷ மலை அருகே டாமின் சுரங்கத்தின் அருகில் இடம் வாங்கி 2008-ம் ஆண்டு கிரானைட் சுரங்கம் தோண்ட அரசிடம் அனுமதியும் பெற்றனர். 2008-ம் ஆண்டே சுரங்கம் எந்த இடத்தில் தோண்ட போகிறோம் என்பதை குறிப்பிடும் MINING PLAN-க்கும் அனுமதி பெற்றனர்.

தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2009-2010-ம் ஆண்டில் சுமார் 165 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையும் 2010-2011-ம் ஆண்டில் சுமார் 1865 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கான குத்தகை தொகையை செலுத்தி பெர்மிட் போட்டு கற்களை குவாரியை விட்டு வெளியே அனுப்பியதாக இந்த நிறுவனம் கணக்கு காண்பித்துள்ளது.

 

அதிர்ச்சி தகவல்

 

அதிர்ச்சி தகவலாக தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் MINING PLAN- படி அவர்கள் இடத்தில் சுரங்கமே தோண்டவில்லை. ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுரங்கமே தோண்டாமல் தொடர்ந்து கிரானைட் கற்களை மட்டும் அவர்கள் இடத்தில் வைத்துக் கொண்டே இருந்தனர். இதை ஆராயும் போது டாமின் சுரங்கத்தில் திருடுவதற்காகவே டாமின் சுரங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தை இவர்கள் வாங்கி தொடர்ந்து டாமின் சுரங்கத்தில் இருந்து கற்களை திருடி வந்துள்ளனர்.

டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்களை கடத்தி வைத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாளில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 225 கியூபிக் மீட்டர் கொண்ட 15 பெரிய கேங்சா கற்கள் கடத்தப்பட்டுள்ளன. தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில் ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை காணவில்லை.

ஆட்சியை மீண்டும் தி.மு.க. பிடிக்க முடியாது என்று தெரிந்த உடன் 2011-ம் ஆண்டு ஒலம்பஸ் கிரானைட் நிறுவன இடத்தில் சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இவர்களின் இடத்தில் பெரும்பாலும் கிராவல் மண் மட்டுமே இருந்தது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒலம்பஸ் சுரங்கத்தையும் டாமின் சுரங்கத்தையும் சட்டவிரோதமாக இணைத்துவிடுகிறார்கள். டாமின் பாதுகாப்பு இடைவெளி பகுதியையும் தோண்டினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. சுரங்கத்தின் உள்ளே சென்று வேலை பார்க்கும் நேரத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில்துறை அமைச்சர் வேலுமணி சட்டசபையில் மு.க.அழகிரி சம்பந்தமாக பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் தன்னுடைய மகன் பெயரில் உள்ள கிரானைட் சுரங்கம் நடைபெற்றதை மறைத்துவிட்டார். இதை தொடர்ந்து மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் அடித்த கொள்ளையை அதிகாரிகள் மறைத்துவிட்டதால் பாதுகாப்பு இடைவெளியில் சுரங்கம் தோண்டியதாக SHOW CAUSE  நோட்டீசுக்கு பதில் அளித்த ஒலம்பஸ் நிறுவனம் டாமின் நிறுவன கிரானைட் சுரங்கத்தின் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் தோண்டவில்லை என்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் விதமாக பதில் அளித்தனர். இதன் பின் சுரங்கம் தோண்டுவது நிறுத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் கடந்த 20.7.2010-ம் தேதியன்று ரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து 21.7.2010-ம் தேதியன்று அதிகாலை தினபூமி நாளிதழில் ஆசிரியர்  S.மணிமாறன் மற்றும் பத்திரிகையாளரும் அவரது மகனுமான M.ரமேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அடுத்த நாளே அவசர அவசரமாக சிறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் மேலும் 5 பொய் வழக்குகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. இதை கண்டித்து அ.தி.மு.க. பொது செயலாளரும் தற்போதைய முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் வாங்க கோரி கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.

 

மு.க.அழகிரி-மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தில் தினபூமி ஆசிரியர் மீது கைது-பொய் வழக்குகள்

 

தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த கைது, பொய்வழக்குகள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்கள் அனைத்தும் டாமின் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து P.R.P.  நிறுவனத்தால் கடத்தி வைக்கப்பட்டவைதான். இந்த திருட்டை கண்டு பிடிக்க தினபூமி நாளிதழ் ஒரு மாபெரும் புலனாய்வு வேட்டையை நடத்தியது. இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கம் அருகே ஏராளமான ரகசிய காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட்டையில் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து P.R.P.  நிறுவனம் P.R.P. நிறுவன லாரிகளில் டாமின் முத்திரை இல்லாமல் கிரானைட் கற்களை கொள்ளை அடித்து P.R.P.  நிறுவன இடத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. P.R.P.  நிறுவனம் வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து சராசரியாக தினமும் ரூ.2 கோடி மதிப்புள்ள 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை கடத்தியது. இதற்கு ஆதாரமும் தினபூமியிடம் உள்ளது. இதே தவறைத்தானே மு.க.அழகிரி மகன் நிறுவனமும் செய்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் மாட்டிக் கொள்வார் என்ற பயத்தின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கையும் பொய் வழக்குகளும் என்பது புலனாகிறது.

தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டாமின் சுரங்கத்தில் திருடிவிட்டு தி.மு.க. ஆட்சி முடிந்த உடன் பழைய தேதியில் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக கூறி திருட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

 

ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயம்

 

தயாநிதி அழகிரியின் ஒலம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருடிய டாமின் சுரங்கத்தில்  ரூ.672 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் மாயமாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்