முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலசப்பாக்கம் மடத்துக்குளம் 2 புதிய வட்டங்கள் உருவாக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் ஆகிய புதிய 2 வட்டங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   மக்களை நாடி அரசு என்ற குறிக்கோளை எய்தும் வகையில் மிகப் பழைமையானதும், பெருமை வாய்ந்ததும் சிறந்த சேவை புரிந்து, அரசின் அச்சாணியாக விளங்கிக் கொண்டிருக்கும் வருவாய் துறையின் பணிகளை மேம்படுத்தும் வகையில், மக்களின் தேவைகள், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு,  மக்களின் வசதிக்காக பெரிய வட்டங்களைப் பிரித்து, புதிய வட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானஅரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர்  வட்டத்திலுள்ள 9 குறுவட்டங்களில் 3 குறுவட்டங்களான கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய உள்வட்டங்களை உள்ளடக்கி புதியதாக கலசப்பாக்கம் என்ற வட்டத்தினை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய வட்டத்தில் பணியாற்றுவதற்காக வெவ்வேறு நிலைகளில் மறுபணி பரவலமர்த்தல் மூலம் 23 பணியிடங்களும் மற்றும் புதியதாக 19 பணியிடங்களும்  உருவாக்கப்படும். இதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே, 35 லட்சத்து 46 ஆயிரத்து 176 ரூபாயும், வட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்பு, வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள், ஜீப், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம்., பேக்ஸ், குளிர்சாதனம், தீயணைப்பான் ஆகியவற்றிற்காக தொடரா செலவினமாக 2 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் அரசுக்கு ஏற்படும். 

இதே போன்று திருப்ர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள குடிமங்கலம், பெதப்பம்பட்டி  உள்வட்டங்களை உடுமலைப்பேட்டை  வட்டத்தில் சேர்த்தும், மடத்துக்குளம் உள்வட்டத்திலுள்ள 8 கிராமங்களைப் பிரித்து துங்காவி என்ற  உள்வட்டத்தை உருவாக்கி மடத்துக்குளம், துங்காவி என்ற இரு உள் வட்டங்கள் அடங்கிய சீரமைக்கப்பட்ட புதிய மடத்துக்குளம் வட்டத்தினை மக்களின் தேவைக்காக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இந்த வட்டத்திற்கென  புதியதாக வருவாய் ஆய்வாளர் 1, உள்வட்ட அளவர் 1,  உதவியாளர் 1,  பதிவறை எழுத்தர் 1, ஆகிய 4 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் தொடர் செலவினமாக  ஆண்டொன்றுக்கு 9 லட்சத்து 98 ஆயிரத்து 724 ரூபாய் அரசுக்கு ஏற்படும்.

திருப்ர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தை இரண்டாக பிரித்து உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய இரண்டு வட்டங்கள் உருவாக்கப்பட்டு, உடுமலைப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.  இந்த வருவாய் கோட்ட அலுவலகம் தற்பொழுது உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.  இதர கோட்ட அளவிலான அலுவலகங்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில்  வாடகை கட்டடங்களில்  செயல்பட்டு வருகின்றன.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டும் ஒரே கட்டடத்தில் இயங்குவதனால் ஏற்படும் இட நெருக்கடியினாலும்,  இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களையும் கருத்தில் கொண்டு, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டத்திற்கென கோட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக உடுமலைப்பேட்டையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 1 கோடியே 85 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் புதியதாக வருவாய் கோட்ட அலுவலகம் கட்ட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  வருவாய்த் துறையில் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் பொது மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்