முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகச்சிறந்த கேப்டன் தோனி இலங்கை கேப்டன் புகழாரம் பாராட்டு மழையில் இந்திய வீரர்கள்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மும்பை, ஏப். - 4 - புத்திசாலித்தனமான  மிகச் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி என்று உலகக் கோப்பையை பறிகொடுத்த இலங்கை அணியின் கேப்டன் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார். 10 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை வங்கதேச நாடுகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் லீக் சுற்றுகளில்  சற்று தடுமாறியது இந்திய அணி. பின்னர் சுதாரித்துக்கொண்ட தோனி தலைமையிலான இந்திய அணி  காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு  உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணி விமர்சனங்களை பொருட்படுத்தாது ஒன்றுபட்டு செயல்பட்டு இறுதியில் கோப்பையை கைப்பற்றியது.  இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய நாடு வென்றதில்லை என்றிருந்த நிலையை மாற்றி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய நாடே கோப்பையை கைப்பற்றி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்தது இந்தியா.

கோப்பைக்கான இறுதி போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,  மிகச் சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். தங்கள் அணியின் தோல்வி குறித்து  அவர் தெரிவிக்கையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக இருந்தது. நாங்கள் 300 ரன்களை எடுத்திருந்தால்கூட இந்திய அணி அதை எளிதில் எடுத்து வெற்றிபெற்றிருக்கும். மேலும் கவுதம் காம்பீர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியின் துடிப்பான ஆட்டம் வெற்றிக்கனியை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. மொத்தத்தில் நாங்கள் ஒரு சிறந்த அணியிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று தெரிவித்தார். 

மிக நீண்ட காலத்திற்கு பிறகு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் வீரர்கள் தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில், உணர்ச்சிப்பூர்வமான தருணம் இது. இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு இந்த பெருமையை நாட்டுக்கு பெற்றுத் தந்துள்ளனர். மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது மிகச் சிறந்த அணிகளாக உள்ள அனைத்து அணிகளையும் வென்றதன் மூலம்  கோப்பையை வெல்ல தாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தாங்கள் ஒரு சிறந்த அணி என்பதையும் உலகத்திற்கு காட்டியுள்ளனர். இந்திய அணி பேட்டிங்கில் மட்டும் சிறப்பான அணி என்ற கருத்தை மாற்றி, அவர்கள் பவுலிங் மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை வெற்றிகண்டுள்ளனர். இது இந்திய வீரர்களின் மிகச் சிறந்த சாதனை என்றும் அவர் இந்திய வீரர்களை பாராட்டியுள்ளார். 

இலங்கை அணியின் பரிதாப தோல்வி குறித்து எழுதியுள்ள அந்நாட்டு பத்திரிகைகள் இந்திய அணி வெற்றிக்கு தகுதியான அணிதான் என்று புகழ்ந்துள்ளதோடு, இலங்கை அணியின் இறுதி வீரர்கள் தேர்வு குறித்து தங்களது கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. இறுதி போட்டியில் விளையாடும் 11 பேரை தேர்வு செய்தது யார்? என்று கேட்டதோடு, அஜந்தா மெண்டிசைவிட கூடுதலாக ரன்களை விட்டுக்கொடுக்கக்கூடிய ரந்தீவை தேர்வு செய்தது யார் என்று கேள்வியையும் எழுப்பியுள்ளன. மேலும் முழுவதுமாக உடல் தகுதி பெறாத முத்தையா முரளீதரனை தேர்வு செய்ததையும் குறைகூறியுள்ளன. உலக கோப்பை இறுதி போட்டி எவ்வளவு முக்கியமானது  என்பதைப் பற்றி சிந்திக்காமல், முரளீதரனுக்கு வழியனுப்பு விழா நடத்த முயற்சித்திருப்பதை அந்த பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த மாபெரும் சாதனையை பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வெகுவாக புகழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வுகுழுத் தலைவராக இருந்த இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான திலீப் வெங்சர்க்கார் தெரிவிக்கையில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி  1983 ல்  உலக கோப்பை வென்ற பிறகு, அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1987 ல் நடைபெற்றது. அப்போது அரை இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் இதே வான்கடே மைதானத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த பழைய மோசமான நினைவுகளை தற்போதைய இந்திய அணியின் அபார வெற்றி துடைத்தெறிந்துவிட்டது. இனி மும்பை வான்கடே மைதானத்தை நினைக்கும்போது தற்போது வென்ற இந்த உலக கோப்பையின் இனிய  நினைவுகள்தான் வரும். அந்த அளவுக்கு இந்த வெற்றி மிக நீண்ட நாட்களுக்கு பேசப்படும் என்று தெரிவித்தார்.  

உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும் பரிசு மழைகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்