சட்டேஸ்வர் புஜராவுக்கு ஏன் வேறு வேலை தரவில்லை கிரிக்கெட் வாரியம்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

தரம்சலா. ஜன. - 28 - இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டேஸ்வர் புஜாராவுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்காமல் வெறுமனே கூல்டிரிங்கிஸ் தூக்கிச் செல்ல பயன்படுத்தி அசிங்கப்படுத்தியுள்ளது இந்திய அணி நிர்வாகம். திறமையான வீரரை இப்படித்தான் வீணடிப்பதா என்று ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். கேப்டன் டோணி ஏன் இப்படிச் செய்தார் என்றும் ரசிகர்கள் குமுறுகின்றனர். இந்தியா தொடரை வென்று விட்டாலும் கூட ஒரு போட்டியில் கூட புஜாராவுக்கு வாய்ப்பளிக்காதது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சேர்க்கப்பட்டவர்தான் புஜாரா. ஆனால் அவரை ஒரு போட்டியில் கூட விளையாட விடவில்லை. மேலும் எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மாவைக் கூட விளையாட வைத்தனர். ஐந்து போட்டிகளையும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் புஜாரா. மொஹாலி போட்டியிலேயே அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆடவில்லை. இன்றைய கடைசிப் போட்டியிலாவது வாய்ப்பளிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் ஆடவில்லை. மொஹாலி போட்டியில் எல்லோரும் புஜாரா ஆடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மாவைச் சேர்த்தார் டோணி. மேலும் ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டிக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் செளராஷ்டிரா அணி தகுதி பெற்றுள்ளது. தற்போது மும்பை அணியுடன் அது மோதி வருகிறது. இந்தப் போட்டியில் புஜாராவை விளையாட அனுமதிக்க முடியாது என்று கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது ஒரு நாள் போட்டியிலும் விளையாட முடியாமல், ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாட முடியாமல் வேண்டும் என்றே கிரிக்கெட் வாரியம் சதி செய்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஞ்சி இறுதிப் போட்டியில் புஜாரா விளையாடியிருந்தால் நிச்சயம் அவருக்கு பெரும் அனுபவமாக அது இருந்திருக்கும். அனேகமாக இதுதான் மும்பை அணிக்காக சச்சின் விளையாடும் கடைசி ரஞ்சிப் போட்டியாக இருக்கும்.எனவே அந்தப் போட்டியில் தானும் ஆடியதை நிச்சயம் பெரிய விஷயமாக புஜாரா நினைத்திருப்பார். அந்த வாய்ப்பை கிரிக்கெட் வாரியம் தட்டிப் பறித்து விட்டது. ஒரு வேளை புஜாராவால் செளராஷ்டிரா அணி வென்று விட்டால், சச்சினுக்கு சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் புஜாராவை போட்டுப் பார்த்து விட்டதா கிரிக்கெட் வாரியம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. புஜாரா மட்டுமல்ல இன்னொரு செளராஷ்டிர வீரரான ரவீந்திர ஜடேஜாவையும் ரஞ்சி இறுதிப் போட்டிக்கு அனுப்ப கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. இதுதான் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. ஆனால் ஜடேஜாவுக்காவது டோணி தொடர்ந்து வாய்ப்பளித்தார். புஜாராவைத்தான் அவர் பயன்படுத்தவே இல்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை!

இதை ஷேர் செய்திடுங்கள்: