முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அறிவிப்பு விவரம் வருமாறு:-

நகர் ஊரமைப்புத் துறையின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் நகர் ஊரமைப்பு நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

புராதன இடங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளைச் சீரழிவிலிருந்து பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 39 நகரங்களும் ஊரக வளர்ச்சித் துறையால் 10 நகரங்களும் புராதன நகரங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகர ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 5 புராதன நகரங்களுக்குத் தலா ரூ.1 கோடி வரை மானியமாக வழங்கப்படும்.

நகரங்களின் அளவு பெருகி வருவதும் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதும் அதிக அளவிலான போக்குவரத்துத் தேவைகளையும், சாலைகளில் நெரிசலையும் உருவாக்கியுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்ய போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 9 நகராட்சிகளுக்கு தலா ரூ.50 லட்சம் வரையிலும, 1 மாநகராட்சிக்கு ரூ.1 கோடி வரையிலும் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும்.

பொதுமக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், அசதி ஏற்படுத்தும் பரபரப்பான அலுவல்களுக்கிடையில் சிறிது நேரம் இளைப்பாறவும் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக பூங்காக்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 பூங்காக்களை மேம்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா ரூ.10 இலட்சம்  வரை மானியமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத வீடுகள் மற்றும் வீட்டுமனைகளைக் கண்டறிவும், கள ஆய்வு மேற்கொள்ளவும், சட்ட நெறிமுறைகளைச் செயல்படுத்தவும், இதன் மூலம் திட்டக்குழு மங்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும் வாகன வசதி மிகவும் அவசியமாகிறது. மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய உள்ளூர்த்திட்டக் குழுமங்களுக்கும் மொத்தம் 6 வாகனங்கள் வழங்கப்படும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சி விதிமுறையில், ஒவ்வொரு கட்டத்திலும் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு செயல்முறைகளை வலுவானதாகவும், சீரானதாகவும் ஆக்க விரிவான தணிக்கை முறை தேவைப்படுகிறது.

முன்னோடியாக உள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு பற்றிய தணிக்கை மேற்கொள்ளப்படும்.

பரந்த குடியிருப்புகளில் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்த வெளியிடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கலந்தாலோசித்து விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் நில உபயோகத் தகவல்களை பொதுமக்கள் இணைதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நில உபயோகத் தகவல் தொகுப்பு (கஹடூக்ஷ மஙூடீ ஐடூக்ச்ஙுஙிஹசிடுச்டூ நநீஙூசிடீஙி) உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மனையிலும் அனுமதிக்கக்கூடிய வளர்ச்சிகள் மற்றும் அதற்கான நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

சென்னை பெருநகர் பகுதியில் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முறைகள் சிறப்பாக அமைந்துள்ளன. பெருகிவரும் தனியார் போக்குவரத்து வாகனங்களால் சாலைகளில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை மக்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பு செய்வது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொள்ளும்.

வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 63 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மீட்டர் நிலப்பகுதியின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony