முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா மரணம் - 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டி வாங்கிய மர்மம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,ஏப்.29 - சாய்பாபா உடல் அடக்கத்திற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டி வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி சாய்பாபா கடந்த 24 ம் தேதி காலை 7.40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்போது புதிதாக சவப்பெட்டி விவகாரம் தலையெடுத்துள்ளது. சாய்பாபா இறந்ததும் அவரது உடல் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடலை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்வதற்கு வசதியாக கூம்பு வடிவில் பெட்டி தயாரிக்கப்பட்டிருந்தது. இது போன்ற வடிவில் சவப்பெட்டி தயாரித்தது இதுவே முதல் முறையாகும். 

கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் இந்த சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரநாத் ரெட்டி என்பவர் இதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரம். ஏப்ரல் 4 ம் தேதி சவப்பெட்டி கோவையில் இருந்து பெங்களூர் அல்சூருக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஏப்ரல் 5 ம் தேதி புட்டபர்த்தி சென்றுள்ளது. ஆனால் இந்த சவப்பெட்டி யாருக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்துக்கு தெரியாது. சாய்பாபா இறந்ததும் 24 ம் தேதி மாலை அவரது உடல் இந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டதை டி.வியில் பார்த்த கோவை நிறுவனத்தின் உரிமையாளர் லெட்சுமி, இந்த சவப் பெட்டி தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறதே என சந்தேகமடைந்தார். இது பற்றி சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சாய்பாபாவுக்காக பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். 

சவப்பெட்டிக்கு முன் கூட்டியே ஆர்டர் கொடுத்தது ஏன்? யார் இதற்கு ஆர்டர் கொடுக்க சொன்னார்கள் என்பது மர்மமாக உள்ளது. சாய்பாபா மார்ச் 28 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஏப்ரல் 15 ம் தேதிதான் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் ஏப்ரல் 4 ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது ஏன் என்பது மர்மமாக இருப்பதாக சாய்பாபா பக்தர்கள் தெரிவித்தனர். இது குறித்து சவப்பெட்டி தயாரித்து கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் லெட்சுமியிடம் கேட்ட போது, சவப்பெட்டி சாய்பாபாவுக்கென்று எங்களுக்கு தெரியாது. டி.வியில் பார்த்த பிறகுதான் நாங்கள் தயாரித்தது என தெரியவந்தது என்றார். சாய் டிரஸ்ட் உறுப்பினர்கள் யாராவது ராஜேந்திரநாத் ரெட்டி மூலம் இதற்கு ஆர்டர் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ். நாகானந்திடம் கேட்ட போது, சாய்பாபா குடும்பத்தினர் சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்றார். 

மற்றொரு உறுப்பினரான முன்னாள் நீதிபதி டி.என். பகவதி கூறுகையில், சவப்பெட்டி ஆர்டர் கொடுத்தது பற்றியோ, புட்டபர்த்திக்கு கொண்டு வந்தது பற்றியோ எதுவும் தெரியாது என்றார். ஆனந்தபூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தனரெட்டியும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். 96 வயது வரை உயிரோடு இருப்பேன் என்று சொன்ன பாபா, உயிர் பிழைத்து வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்திருப்பது மர்மமாக இருப்பதாக பக்தர்கள் கூறினர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூர் காயத்ரி நகர் காளிகா ஆசிரம பீடாதிபதி யோகேஸ்வர ருசி குமாரசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்