முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் மரணம் குறித்து விசாரணை தேவை: வைகோ

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

உண்மை நிலையை அறிய நீதி விசாரணை வேண்டும்: வைகோ 

 

இளவரசன் மரணம் குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞனான இளவரசன் ரெயில்வே பாதைக்கு அருகில் உயிரற்ற சடலமாக கிடந்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது.

சாதி, மதம், மொழி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இளம் உள்ளங்கள் காதலிப்பதும் இணைவதும், உலகம் முழுவதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றன. உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட, காலத்தை வென்ற காவியங்கள் பலவும், காதலை மையமாகக் கொண்டு எழுந்தவையே.

பெற்றோர், உற்றார் தடுத்ததால், அவர்கள் வாழ்ந்த சமூகங்களில் ஏற்பட்ட அடக்குமுறைகளால், தாங்கள் விரும்பிய காதல் வாழ்வைத் தொடர முடியாமல், காதலர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட துன்பியல் நிகழ்வுகளைப் பிரதிபலித்த இலக்கியங்களே, அமர காவியங்கள் ஆகின.

இதோ, தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் உள்ளங்கள், இளவரசனும் திவ்யாவும்  காதலித்து, முறையாக வாழ்வதற்காகத் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், நடக்கக்கூடாத மோதல்களும், தாக்குதல்களும் நடைபெற்று, ஒற்றுமையாக வாழவேண்டிய தலித் மக்களும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களும், பகைமையும், வெறுப்பும் கொள்ளும் விபரீதம் நேர்ந்தது.

இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி கூறப்பட்டாலும், இளவரசனின் பெற்றோர் உறவினர்கள், அவர் தைரியமாகவும், நம்பிக்கையுடன்தான் சம்பவத்தன்று காலை இயங்கினார் என்றும், எனவே அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

எனவே, இளவரசன் மரணம் குறித்து நடந்த உண்மையை கண்டறிய தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உள்ளம் உடைந்த நிலையில் உள்ள திவ்யாவை என்னுகையில் துக்கம் மேலிடுகிறது. அந்த இளம் தளிரையையும் பாதுகாக்க தக்க சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இளம் வயதிலேயே கருகி அழிந்து போன இளவரசனைப் பறிகொடுத்து, கண்ணீரில் துடிதுடிக்கும் பெற்றோருக்கும், உற்ற உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

திருமாவளவன்:

 

இளவரசனின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தொல்.திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திவ்யாவின் கணவர் இளவசரன் தற்கொலை செய்திருக்கிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, 

திவ்யாவின் கணவர் இளவரசன் மரணம் அடைந்திருக்கும் இந்த செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரெயில் பாதையில் தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறிய நிலையில், குப்புற விழுந்து பிணமாக கிடந்திருக்கிறார். உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. 

திவ்யாவை சிலர் மிரட்டி, நீதிமன்றத்தில், இளவரசனோடு இனி வாழமாட்டேன் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ஜூலை 1-ந் தேதி நடந்த விசாரணையில், எனது கணவரோடு வாழ விரும்புகிறேன் என்று சொல்லிய அவர், அடுத்து 3-ந் தேதி நடந்த விசாரணையில், அவருக்கு எதிராக பேசியிருக்கிறார். இது இளவரசனுக்கு நன்றாகவே தெரியும்.

எப்படியும் திவ்யா தன்னை தேடி வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தான். ஆகவே, அவன் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என்று தெரிய வருகிறது. இந்த நிலையில், அவனுடைய சடலம் ரெயில் பாதையில் கிடப்பது, பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு, இளவரசனின் சாவு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago