முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை 20-ந்தேதி முதல் நிறுத்துவது என்று தங்கநகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அன்னிய செலாவணியை கருத்தில் கொண்டு, இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த மாதம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தியது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாக இந்தியாவின் தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டது.

ஆனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்வு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இறக்குமதியும் குறையவில்லை. இந்தநிலையில் சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, மத்திய அரசுக்கு ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பீட்டினை குறைக்கும் வகையில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்கநகை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம்-வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் ஜெலானி நிருபரிடம் கூறியதாவது:-

இந்தியாவில் விற்பனையாகும் நகைகளில் 20 சதவீதம் தங்க நாணயங்கள் ஆகும். தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதன் மூலம் இந்தியாவில் 20 சதவீதம் தங்கத்தின் மீதான இறக்குமதி குறையும். இதன் மூலம் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி இழப்பீடும் 20 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 20-ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று கடந்த 1-ந்தேதி சென்னையில் நடைபெற்ற தங்கநகை வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலும் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று அங்குள்ள தங்க நகை வியாபாரிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடக, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று அங்குள்ள வியாபாரிகளையும் கேட்டு கொண்டுள்ளோம். அதன்படி ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்படும். தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம் இந்திய ரூபாயின் மதிப்பு சீரடையும் வரை நடைமுறையில் இருக்கும்.

அதிகபட்சம் 6 மாத காலம் வரை தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்படலாம். பெரும்பாலான நகைக்கடைகளில் தற்போதே தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தங்க நாணயங்கள் இருப்பு உள்ள ஒரு சில நகைகடைகளில் மட்டும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெயந்தி லால் ஜெலானி கூறினார்.

தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம் எதிரொலியாக, தங்கத்தின் விலை குறைவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்