முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் - கூட்டுக் குழு விசாரிக்கும்: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Manmohan

 

புது டெல்லி,பிப், 23 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்து விட்டது. ஜே.பி.சி. அமைப்பது தொடர்பான மத்திய அரசின் முடிவை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒருவழியாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் முறைப்படி தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய உலக மகா ஊழல்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். படித்தவர்கள் முதல் பாமரர் வரை இந்த ஊழல் இன்று பேசப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் இந்த ஊழல்கள் நிச்சயம் எதிரொலிக்கும். இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பி.ஏ.சி. எனப்படும் பொதுக் கணக்கு குழு விசாரித்தால் போதாது. ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க., பா.ஜ.க போன்ற கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் ஆரம்பத்தில் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் வெறுப்படைந்த எதிர்க்கட்சிகள் கடந்த முறை நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்தவே விடவில்லை. அதன் செயல்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயின. பட்ஜெட் கூட்டத் தொடரையும் ஸ்தம்பிக்க வைப்போம் என்று எதிர்க்கட்சிகள் மிரட்டின. இதனால் அரண்டு போன மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி பார்த்தது. அந்த கூட்டத்திலும் ஜே.பி.சி.தான் தீர்வு என்று எதிர்க்கட்சிகள் கூறி விட்டன. இதையடுத்து ஜே.பி.சி.யை அமைக்க மத்திய அரசு சில தினங்களுக்கு முன் முடிவு செய்தது. 

இந்த நிலையில்தான் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளன்று ஜனாதிபதி பிரதீபா இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பிறகு நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது. முதல் அலுவல் நாளான நேற்று லோக்சபையில் பிரதமர் மன்மோகன்சிங் எழுந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஜே.பி.சி. அமைப்பது என்ற மத்திய அரசின் முடிவை பிரதமர் சபையில் முறைப்படி அறிவித்தார். அது மட்டுமின்றி இந்த கூட்டுக் குழுவை அமைப்பதற்காக முறைப்படி சபையில் தீர்மானம் கொண்டு வரப்படும். அது விரைவில் சபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் மனதை மாற்ற நாங்கள் எவ்வளவோ முயன்றோம். ஆனால் அதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். ஜே.பி.சி பற்றி வலியுறுத்தாதீர்கள் என்று கேட்டு பார்த்தோம். ஆனால் அது பலிக்கவில்லை. எங்களால் அதில் வெற்றி பெறவும் முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

ஊழலை ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. ஊழல் நிச்சயம் வேரறுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இனி பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் அறிவித்தார். எது எப்படியோ ஜே.பி.சி. விஷயத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று விட்டன என்பதை மறுக்க முடியாது. இந்த ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக் குழுவில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் டாக்டர் தம்பிதுரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: