முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தீர்ப்பு - 31 பேர் குற்றவாளிகள்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத்,பிப்.23 ​- சர்ச்சைக்குரிய கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் நேற்று ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதான குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட மவுலான உமர்ஜி உட்பட 63 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கரசேவையை முடித்துக் கொண்டு கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் வழியில் இந்த ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் ரயிலின் பல பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவத்தில் 59 பேர் உடல் கருகி பலியானார்கள். 

2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் பல இடங்களில் வன்முறையும், கலவரமும் வெடித்தது. இந்த கலவரத்தில் முஸ்லீம்கள் உட்பட ஆயிரத்து 200 பேர் வரை பலியானார்கள். இதனிடையே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில்தான் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.பட்டேல், தனது தீர்ப்பை அளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மவுலானா உமர்ஜி உட்பட 63 பேரை விடுவித்து நீதிபதி பி.ஆர்.பட்டேல் தீர்ப்பளித்தார். இத்தகவலை சபர்மதி சிறைக்குள்ளே தீர்ப்புக்கு பிறகு அரசு வழக்கறிஞர் ஜே.எம். பஞ்சால் தெரிவித்தார். 

இந்த தீர்ப்பின் மூலம் உமர்ஜி விடுவிக்கப்பட்டாலும் இதர பிரதான குற்றவாளிகளான ஹஜ்பில்லா மற்றும் ரஜக் குர்குர் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்ற விபரம் வரும் 25 ம் தேதி அறிவிக்கப்படும்.  ரயில் எரிப்பு சம்பவத்தில் சதித்திட்டம் இருப்பதை சிறப்பு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. வாத, பிரதிவாதங்கள் முடிந்த பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் தண்டனை விவரம் மட்டும் வரும் 25 ம் தேதிதான் அறிவிக்கப்படும். இந்த தீர்ப்பையொட்டி ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதும் உலுக்கிய சம்பவம்தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாகத்தான் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!