முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் - சி.பி.ஐ. விசாரணை அறிக்கை குறித்து தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
CBI-India 0 0

 

புது டெல்லி,பிப்.23 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையின் விபரங்கள் குறித்து டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று பல முக்கிய தகவல்களை தெரிவித்தது. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உலக மகா ஊழலாக கருதப்படுகிறது. இந்த ஊழலின் கதாநாயகன் ஆண்டிமுத்து ராசா பற்றி குற்றம் சாட்டப்பட்ட போது ஆரம்பத்தில் அதை அவர் மறுத்தார். ஆனால் இந்த இழப்பு உண்மைதான் தணிக்கை துறை அதிகாரி அறிக்கை வெளியிட்ட பிறகு விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் எதிர்க்கட்சிகள் எழுப்பிய போர்க்கொடியை அடுத்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ. ராசா பதவி விலகினார். அதையடுத்து அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. 

இதையடுத்து ஆ. ராசா கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ. 14 நாட்கள் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. தற்போது ஆ. ராசா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மெத்தை விரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மெத்தையில் அவர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராசாவுடன் சேர்த்து மேலும் 2 அதிகாரிகளும், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி பல்வாவும் கைது செய்யப்பட்டு அவர்களும் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தற்போது நடந்து வரும் விசாரணை விவரங்கள் குறித்து நேற்று டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. சில முக்கிய தகவல்களை எடுத்துரைத்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தனியார் கம்பெனிகளிலும் தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதை சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்தது. 

மேலும் ராசா உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நடந்த சோதனைகள் பற்றியும் சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்தது. அதாவது, விசாரணை விவரங்கள் அத்தனையும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் கிடைத்த ஏராளமான ஆவணங்கள் பற்றியும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சாட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி பிரதீப் சத்தாவிடம் மத்திய புலனாய்வு துறை எடுத்துரைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: