முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் குடும்பத்தையும் பிளவுபடுத்தி விட்டது காங்கிரஸ் : ஜெகன் பேட்டி

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

கடப்பா, மே. - 9 - என் குடும்பத்தையும் காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்தி விட்டது என்று கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று கடப்பா எம்.பி. தொகுதியிலும், புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனாவார். இதே போல் புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். மனைவி விஜயலெட்சுமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விவேகானந்தா ரெட்டி என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஆவார். ஆக, குடும்பத்திற்குள்ளேயே போட்டி நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று இந்த இரண்டு தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. கடப்பா தொகுதியில் நேற்று நண்பகல் 12 மணி வரை 36.23 சதவீதம் வாக்குகள் பதிவானது. புலிவெந்துலா தொகுதியில் நண்பகல் 12 மணி வரை 34.66 சதவீத வாக்குகள் பதிவானது. வன்முறை சம்பவங்கள் எதுவும் பெரிய அளவில் நடைபெறவில்லை. வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடப்பா தொகுதியில் 13.29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புலிவெந்துலா தொகுதியில் 1.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலையொட்டி சுமார் 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடப்பாவில் ஆயிரத்து 500 வாக்கு சாவடிகள் உள்ளன. இவற்றில் 584 வாக்கு சாவடிகள் பதட்டமானவை. வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு அனைத்தும் வீடியோ படம் எடுக்கப்பட்டது. கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார். வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,
காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். என் அம்மாவுக்கு எதிராக என் சித்தப்பாவையே போட்டியிட வைத்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சி என் குடும்பத்தையும் பிளவுபடுத்தி விட்டது என்று வேதனையோடு கூறினார். புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடும் விவேகானந்தா ரெட்டி நானே வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். நேற்று இந்த இரண்டு தொகுதிகளிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆர்வத்தோடு வாக்களித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony