முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் நிலையங்களில் விரைவில் வங்கி சேவை தொடககம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.அக்.4 - தபால் நிலையங்களில் விரைவில் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது என்று தலைமை தபால் அதிகாரி மெரிவின் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

இது பற்றி தலைமை தபால் அதிகாரி (பி.எம்.ஜி.) மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:_

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 9_ந் தேதி (புதன்கிழமை) உலக தபால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு சர்க்கிள் தபால் நிலையங்களிலும் 'உலக தபால் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. மனித வாழ்க்கையில் தபால் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இதன் நோக்கம்.

உலக தபால் தினத்தையொட்டி, 9_ந் தேதியில் இருந்து 15_ந் தேதி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

10_ந் தேதி சேமிப்பு தினம், 11_ந் தேதி தபால் சேவைகள் தினம், 12_ந் தேதி தபால்தலை சேகரிப்பு தினம் என ஒவ்வொரு நாளும் ஒரு நோக்கத்தை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையினரிடையே குறிப்பாக மாணவ_மாணவிகளிடம் கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில், மாணவ_மாணவிகளுக்கு தபால் கார்டு அல்லது இன்லேண்டு லெட்டர் கொடுத்து அவர்களுடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு கடிதம் எழுதி தபால் பெட்டியில் சேர்க்கச்சொல்ல இருக்கிறோம்.தபால் நிலையங்கள், ஆர்.எம்.எஸ். சேவை செயல்பாடுகளை நேரில் அழைத்துச்சென்று விளக்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதேபோல், சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில் 10 ரூபாய் செலுத்தி தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கச்சொல்ல இருக்கிறோம். 50 ரூபாய் செலுத்தி வைப்புத்தொகை (ஆர்.டி.) கணக்கு தொடங்கவும் வழிசெய்ய உள்ளோம்.

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் ஏறக்குறைய 23 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில், ஏறக்குறைய 6 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளில் 24 ஆயிரத்து 435 கோடி ரூபாய் உள்ளன.

தபால் நிலைய இன்சூரன்ஸ் (பி.எல்.ஐ.), கிராமப்புற தபால் நிலைய இன்சூரன்ஸ் (ஆர்.பி.எல்.ஐ.) ஆகியவற்றிலும் மக்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு பிரீமியத்தொகை உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, விரைவில், ஆன்லைனில் பிரீமியத்தொகை செலுத்தும் வசதி செய்யப்பட உள்ளது.

தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும் வகையில் விரைவில் தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்கள் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களையும் ஒரே குடையின் கீழ் (கோர் பேங்கிங்) இணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony