முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பாதுகாப்பு வீரர் துப்பாக்கி வெடித்து பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

காரைக்குடி மே.15 - வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புபடை வீரர் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார்.தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 13ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு எந்திரங்கள் நான்கு கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டத்தில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பணயில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் உள்பட ஐந்து மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இங்கு கடந்த 15 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர், அருகே உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். திருப்பத்தூர் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள், இயந்திரக்கோளைறு காரணமாக மிகவும் தாமதமாக நடந்தன. அந்த சட்டசபைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் நேற்று அதிகாலையில்தான் முடிந்தது. பணிகள் முழுவதுமாக முடிந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓய்வெடுப்பதற்காக  நேற்று அதிகாலை 5 மணிக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்றனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுபேசிங்(30) தனது அறைக்குத் திரும்பி ஆடைகளை மாற்றி விட்டு, துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது தவறுதலாக கை பட்டதில், துப்பாக்கி எதிர்பாராவிதமாக வெடித்தது. இதில் இடது மார்பில் குண்டு பாய்ந்துசம்பவ இடத்திலேயே சுபேசிங் உயிரிழந்தார். தகவலறிந்த எஸ்பி ராஜசேகரன், ஏடிஎஸ்பி கண்ணன் இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சுபேசிங் உடல், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் பாதுகாப்புப் பணியை சிறப்பாக ஆற்றிய பாதுகாப்பு படைவீரர், பணிகள் முடிந்து கிளம்பும் தருணத்தில் நடந்த இச்சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony