முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் கூட்டணி ஆட்சி: ரங்கசாமி முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுச்சேரி, மே.15 - புதுவை மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 18 தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதியிலும், 9 தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. 5 தொகுதியிலும் வெற்றி பெற்று மொத்தம் 20 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 

புதுவையில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமானது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் வசம் 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் ரங்கசாமி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்தால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 14 ஆக குறையும். 

அதோடு காரைக்கால் நிரவி திருப்பட்டினத்தில் இருந்து வி.எம்.சி.வி.சிவக்குமார் சுயேட்சையைக வெற்றி பெற்றுள்ளார். அவரின் ஆதரவு பெற்றால் மீண்டும் 15 உறுப்பினர்களின் பலம் கிடைக்கும். அதோடு சட்டமன்றத்தில் 29 உறுப்பினர்கள் இருப்பதால் மெஜாரிட்டிக்கு 15 உறுப்பினர்கள் இருந்தால் போதும். இதனால் ரங்கசாமியின் ஆதரவு இல்லாமலேயே ரங்கசாமியால் ஆட்சி அமைக்க முடியும். 

ஆனாலும் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரங்கசாமியே முதல்வர் என்றும், அ.தி.மு.க. விற்கு 2 அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. 

இதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தே ரங்கசாமி ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அரசியல் ரீதியாக மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு ரங்கசாமிக்கு கிடைக்காது. இந்த நேரத்தில் அண்டை மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் நெருக்கம் இருப்பது நல்லது என்றும் பூகோள ரீதியாக பின்னிப்பிணைந்து உள்ள புதுவைக்கு இது பல வகையில் நிர்வாக ரீதியாக உதவும் என்றும் ரங்கசாமி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. 

இதனால் ரங்கசாமி அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ரங்கசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். 

இதற்காக அவர் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் ரங்கசாமி கலந்து கொள்கிறார். அப்போது அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கூட்டணி ஆட்சி பற்றி முடிவு செய்யப்படும். 

அ.தி.மு.க. சார்பில் யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும். 

ரங்கசாமி எப்போது பதவி ஏற்றுக் கொள்வார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. புதுவை சட்டசபையின் கால அவகாசம் மே 28-ந் தேதி வரை உள்ளது. எனவே அதற்குள் எப்போது வேண்டுமானாலும் பதவி ஏற்கலாம். 

நீண்ட நாட்கள் இருப்பதால் ரங்கசாமி நிதானமாக முடிவு செய்தே பதவி ஏற்றுக் கொள்வார். ரங்கசாமி எந்த ஒரு காரியத்தையும் நாள், நட்சத்திரம் பார்த்தே செய்வார். எனவே பதவி ஏற்பு எப்போது நடத்தினால் சரியாக இருக்கும் என்று விவாதித்து முடிவு எடுப்பார். 

அவர் பதவி ஏற்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம் என்று என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ரங்கசாமி எந்த முடிவு எடுத்தாலும் சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டுத்தான் முடிவு எடுப்பார். அவர் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேலம் சென்று அப்பா பைத்தியசாமி கோவிலில் விசேஷ பூஜை நடத்தினார். எனவே பதவி ஏற்பு விழா குறித்து அவர் விரைவில் முடிவு செய்வார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்