முக்கிய செய்திகள்

தாவூத் இப்ராகீம் சகோதரரை கொல்ல முயற்சி

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
Iqbal Kaskar

மும்பை,மே.19 - மும்பை தாதா தாவூத் இப்ராகீம் சகோதரர் இக்பால் கஸ்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியில் மற்றொரு தாதாவான சோட்டா ராஜனுக்கு தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகம் இழுந்துள்ளது. இது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மும்பை தாதாக்களில் பெரிய தாதா தாவூத் இப்ராகீம். இவன், பாகிஸ்தானுக்கு தப்பியோடி சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். இவனுக்கும் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவனுடைய தம்பி இக்பால் கஸ்கரும் ஒரு ரவுடி. இவன் துபாயில் இருந்தான். அங்கு பல கொலை, கொள்ளை போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவனை இந்தியாவுக்கு துபாய் அரசு அனுப்பிவிட்டது. மும்பைக்கு வந்துள்ள கஸ்கர், இங்கேயும் பல கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவன் மீது பலருக்கு வெறுப்பும் கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த செவ்வாய் மும்பையில் ஒரு காரில் சென்று கொண்டியிருந்தான். அப்போது பின்னால் வந்த 2 பேர் அவனை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கஸ்கரின் பாதுகாவலர் குண்டுபாய்ந்து இறந்துவிட்டான். ஆனால் கஸ்கர் காயமின்றி தப்பிவிட்டான். இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் மும்பையின் மற்றொரு தாதாவான சோட்டா ராஜனுக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சோட்டா ராஜனும் தாவூத் இப்ராகீமும் ஒருவருக்கொருவர் விரோதிகள். அதனால்தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.  இருந்தபோதிலும் இதுகுறித்து தற்போது எதுவும் கூறுவது சரியாக இருக்கிறது. விரிவான முறையில் விசாரணை நடத்திய பிறகுதான் கூறமுடியும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். கஸ்கருக்கு பலருடன் பகைமை இருக்கிறது. இந்த கொலை முயற்சி தனிப்பட்ட முறையில் விரோதத்தின் காரணமாக நடந்திருக்கலாம் என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார். இதற்கிடையில் இந்த கொலை முயற்சி தொடர்பாக சய்யீது அலி (29) இந்திரா காத்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேபாளத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: