முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சேலம் டிச.16 - அதிமுக அரசின் நல்ல திட்டங்களுக்காக கிடைத்த வெற்றிதான் ஏற்காடு இடைத் தேர்தல் வெற்றி என நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் இரவு வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். வாழப்பாடி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான சதீஷ்குமார் வரவேற்று பேசினார். ஏற்காடு எம்.எல்.ஏ.பி.சரோஜா, சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன்,ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மணி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தலிங்கம், ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன்,செம்மலை எம்.பி. மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்டு, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது. ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மகத்தான வெற்றியை ஏற்காடு சட்டமன்ற தொகுதி அளித்ததன் மூலம் ஏற்காடு முதல்வர் ஜெயலலிதாவின் எக்கு கோட்டையாக உள்ளது என்படை நிரூபித்து காட்டியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் 2 1/2 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றதன் மூலம் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.எம்.ஜி.ஆர்.11 ஆண்டுகளும், ஜெயலலிதா 12 ஆண்டுகள் முடித்து 13 வது ஆண்டிலும் அடி எடுத்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆளும் உரிமையை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். அதிமுகவிற்கு ஜெயலலிதா பொறுப்பேற்று 25 ஆண்டுகளில் சோதனைகள்,வேதனைகளை எல்லாம் தாங்கி யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழ்கிறது. தமிழக மக்கள் ஏற்ற தாழ்வுகள் இன்றி வாழும் வகையில் அவர்களின் சமூக பாதுகாப்பிற்காக ரூ.43 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.100 ஆண்டுகாலம் எதிர்கால சந்ததியினர்களஉம் அந்த பலனை பெறுவதற்காக ஜெயலலிதா லட்சிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். 1 கோடியே 85 லட்சம் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கி உண்ண உணவு வழங்கியவர். வீடற்ற மக்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

ஏழை பெண்கள் திருமணத்திற்காக 25 ஆயிரம் பணமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும், அதுவும் படித்து பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரமும்,தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல திட்டங்களுக்காகதான் ஏற்காடு தொகுதி மக்கள் இந்த வரலாற்று மிக்க வெற்றியை தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வீட்டு பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ_மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கல்வி தாயாக விளங்கி வருகிறார்.

யாரும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்ல முடியாத ஆட்சியாக தமிழத்தில் அதிமுக வழங்கி வருகிறது.சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றோம். இதன் மூலம் நமது இயக்கத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 4 ஆயிரம் பேர் பதவி பெற்றுள்ளனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏற்காடு தேர்தலில் மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கி தந்துள்ளீர்கள். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தா வெற்றி பெறுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதன் பிறகு நடந்த இடைத் தேர்தலிலும் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற வாக்குகள் கேட்டோம். அதுபோல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நமது களப்பணியானது ஜெயலலிதாவை பிரதமராக்க வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். அதற்குதான் நிங்கள் பெற்று தந்த வெற்றி அடித்தளமாக அமைந்துவிட்டது என்று சொன்னேன்.இவ்வாறு அவர் பேசினார்.  

இந்த கூட்டத்தில் வாக்காளர்களுக்கு ஏற்காடு எம்.எல்.ஏ.சரோஜா நன்றி தெரிவித்து பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ்,விஜயலட்சுமி பழனிசாமி,பல்பாக்கி கிருஷ்ணன், எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,மாதேஸ்வரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், சேலம் மேயர் சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன்,மண்டல தலைவர்கள் தியாகராஜன்,மாதேஸ்வரன்,சண்முகம், பிரகாஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.துரைராஜ், மாணவரணி செயலாளர் சக்திவேல், மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி,பாசறை செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மேட்டூர் நகர சபை தலைவர் லலிதா சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வாழப்பாடி பேரூராட்சி தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony