முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.25 - இந்தியாவை வழி நடத்தும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்குவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதிமுக நிறுவனத் தலைவர்  எம்ஜிஆரின் 26_வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.

உறுதிமொழி விபரம் வருமாறு:_

ழூ அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் புகழையும், மனிதாபிமான உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு வாழ்வோம்.

ழூ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் கிராமங்கள் தோறும் பரப்ப உறுதி ஏற்போம்.

ழூ எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக வெற்றி சிகரத்தை தொடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வறியா உழைப்பும் ஒப்பற்ற தியாகமும்தான் காரணம் என்பதை ஒருநாளும் மறவாது இருக்க உறுதி கூறுகிறோம்.

ழூ 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' _ என்ற தூய உள்ளத்தோடு பணியாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா  தமிழகத்திற்கும், அதிமுகவிற்கும் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு எந்நாளும் நன்றியோடும், உறுதியோடும் இருப்போம்.

ழூ பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் நலன் காக்க தன்னலம் இன்றி பாடுபடும்  அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனம் மகிழும் வண்ணம் தூய தொண்டராக மக்கள் பணியாற்றுவோம்.

ழூ அறிவும் ஆற்றலும் மிக்க தலைவருமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூலமாக இந்திய திரு நாட்டிற்க்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்நேரத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியை பெற அள்ளும் பகலும் அயராது உழைப்போம்.

ழூ தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

ழூ தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சனையில் முதலமைச்சர்  மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும்  தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

ழூ இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று உலக நாடுகள் பலவும் குரல் எழுப்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை தமிழக மக்களிடம் விலக்கிக் கூறுவோம்.

ழூ தமிழக முதலமைச்சர் தான் இந்திய நாட்டின் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம்.

ழூ அம்மா உணவகம்,  அம்மா குடிநீர் திட்டம், பண்ணை பசுமை காய்கறித் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய திட்டங்களை இந்திய நாட்டிற்கே விரைந்து வர பணியாற்றுவோம்.

ழூ நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சொத்து தனியார் வசம் சென்றுவிடாமல் மதியுகமாய் செயல்பட்ட முதலமைச்சர் நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலை வந்தால் மட்டுமே இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

ழூ எப்பொழுதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்து அவர்களது வாழ்வு ஏற்றம் பெறுவதற்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சருடைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய பணியாற்றுவோம்.

ழூ தமிழக மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர்தான் பசிப்பிணி போக்கும் அன்னமிட்ட கை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

ழூ மக்களின் உடமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்திய கருணாநிதியின் அராஜகங்களை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பையும் நிறைவான வாழ்வையும் அளித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு மக்கள் பேராதரவை அளித்திட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்ய உறுதி ஏற்போம்.

ழூ விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40" தொகுதிகளிலும் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் அதிகாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் வழங்கும் வகையில் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் முழு ஆற்றலோடு களப்பணி ஆற்றுவோம்.

இவ்வாறு உறுதி ஏற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony