முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு தேதியை அறிவிக்க கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.14 - தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு நடைபெறும் தேதியை அறிவிக்கவிட்டால் ஜூலை 4-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று கே.ஆர். கூறினார். இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்புக் குழு தலைவர் கே.ஆர். கூறியதாவது: மே 20-ம் தேதி நடைபெற்ற இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை தொடர்ந்து மே 22-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம் செயற்குழுவை கூட்டி ``ஜூலை 3-ம் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்றும், அதில் தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்'' என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகளுடன் பாதுகாப்புக் குழுவை சேர்ந்த நாங்களும் பங்கேற்றோம். பொதுக்குழு கூட்டுவது பற்றிய முடிவை ஒரு பேட்டியிலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார். ஆனால் இன்றுவரை பொதுக்குழு நடத்துவதற்கான எந்த முயற்சியும் அவர்கள் செய்யவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ``பெப்சி'' தொழிலாளர்கள் அமைப்புக்கும் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜனவரி 15-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது இருதரப்பினருக்கும் தெரியும். கடந்த 5 ஆண்டுகளாகவே சங்கத்தின் செயல்பாடுகளைப்பற்றி எந்த வகையிலும் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காத சங்க நிர்வாகிகள், சம்பள உயர்வு பிரச்சினை பற்றியும் தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஜூன் 4-ம் தேதி இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தற்போது நிலுவையில் உள்ள படபிடிப்புகள் பாதிக்கப்படக்கூடாது. அதனால் அப்பாவி தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் நஷ்டபடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் ஜூன் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டோம். ஆனால், அதற்கு முரணாக ஜூன்11-ம் தேதி அவசரமாக மீண்டும் ``பெப்சி''யுடன் பேச்சுவார்த்தை தொடங்கினர்.

ஏற்கனவே அறிவித்தபடி சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தயாரிப்பாளர்கள் கருத்துக்களை கேட்காமல் ஏன் அவசரகோலத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டோம். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலைமை இல்லாமல் பேசமுடியுமே தவிர அதிகாரபூர்வமான ஒப்பந்தம் போடமுடியாது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை அவசர கோலத்தில் முடிவு செய்ய முடியாது என்று தெரிந்தும், உள்நோக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடருவது நாடகம்தான். பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை சிலர் சுயநல நோக்கத்துடன் தங்கள் வசதிக்காக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதையும் எங்களால் அனுமதிக்க முடியாது.

கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில் இனி நாங்கள் பங்கேற்கப் போவதில்லை. இருப்பினும் இறுதி முடிவு ஏற்படும் வரை தொழில் முடக்கம் ஏற்படும் வகையில் வேலை நிறுத்தம் போன்ற செயல்களில் இரு தரப்பினரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே செயற்குழுவில் அறிவித்தபடி ஜூலை 3-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தயாரிப்பாளர்கள் பாதுகாப்புக்குழு சார்பில் ஜூலை 4-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony