முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சருக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.16 - தமிழகத்தில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பள்ளிகளை நடத்துவோமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.

தமிழக அரசின் சமச்சீர்கல்விக்கு பெயரளவில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இருக்ககூடிய கல்வியின் தரத்தை குறைக்க கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இந்த கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. மற்ற மாநிலங்களை போல நமது கல்வி கொள்கை சிறந்ததாக அமைய வேண்டும். கல்வியின் தரம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக அமைய வேண்டும். தற்பொழுது உள்ள கல்வி திட்டம் போதுமான தரமானதாக இல்லை. நமது கல்வி திட்டம் தேசிய அளவில் முதன்மையானதாகவும், உலக அளவில் சிறந்ததாகவும்  அமைய வேண்டும். 

தமிழக வரலாற்றில் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு சென்ற அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைதான் காரணம்.

தனியார் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து வருகிறோம். ஆனால், சென்ற தமிழக அரசு தவறான கல்வி கட்டண கொள்கையினை அமல்படுத்தி எங்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது. அதனால், அரசின் இக்கொள்கையினை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், சென்ற அரசு உடனே இடைக்காலத்தடை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி நீதிஅரசர் ரவிராஜபாண்டியன் ஏப்ரல் 30, 2011-க்குள் அல்லது விரைவில் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், நேற்று 14-ம் தேதிதான் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. நீதி அரசர் கோவிந்தராஜன் கொடுத்த கல்வி கட்டணத்தை விட பெரும்பாலன பள்ளிகளுக்கு கட்டணத்தை குறைத்துள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மிகவும் கட்டணம் மோசமான நிலையில் உள்ளது. பொதுவாக இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆசிரியர்கட்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய இன்கிரிமெண்ட் கொடுக்க முடியவில்லை. விலைவாசி ஏற்றம், லோன் பெற்ற பள்ளிகட்கு அதில் செலுத்தப்படும் வட்டி, நல்ல உள் கட்டமைப்பு வசதி போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படவில்லை.

எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  தலையிட்டு இதில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை உருவாக்கவேண்டும். தேர்தலின் பொழுது ஜெயலலிதா முத்தரப்பு கமிட்டி அமைப்பதாக கூறினார். இந்த முத்தரப்பு கமிட்டியை அமைத்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தரமான கல்வி சி.பி.எஸ்.இ-க்கு இணையானதாகவும், உலகிலேயே தமிழ்நாட்டில் உள்ள கல்வி மிகவும் சிறந்தவையாகவும்,  அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா கல்வி கட்டணத்திலும் தலையிட்டு நியாயமான தீர்ப்பினை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் அனைத்து பள்ளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு வெங்கடாசலபாண்டியன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்