முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எதிர்ப்பு: பாதியில் முடிந்த மாநகராட்சி கூட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.16 - அ.தி.மு.க. - தேமுதிக எதிர்ப்பால் மதுரை மாநகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்து, அதிமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.  திமுக மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் செபாஸ்டின் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் திமுக கவுன்சிலர்கள் சோர்ந்து போய் இருந்தனர். கேலியும், கிண்டலும், ஏளனமான சிரிப்பும் காணாமல் போய் ஒரு இருக்கமான முகத்துடன் திமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த காலத்தில் போலீசை வைத்து மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவை மக்கள் நல்ல தீர்ப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. ஜெயலலிதாவை 3 வது முறையாக மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர். ஜனநாயகம் செத்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மதுரை மாவட்ட கலெக்டர் அதை காப்பாற்றி உள்ளார். அதே போல் இது தாண்டா போலீஸ் என்பது போல் போலீசாரை சரியாக செயல்பட விட்ட கமிஷனர் கண்ணப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்டி வந்தோம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்திய அளவில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. பணத்தால் தமிழக வாக்காளர்களை எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து ஜெயலலிதாவை மிகப்பெரும்பான்மையாக வெற்றியடைய செய்து, பணத்தை நம்பிய அக்கிரமகாரர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றிய தமிழக மக்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த தேர்தல் கமிஷனுக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தென் மாநில முதல்வராக செயல்பட்ட மு.க.அழகிரியாலும் சுரேஷ்பாபுவாலும் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. ஆட்சி மாறி உள்ளது அதிகாரிகள் இனிமேலாவது திருந்தி கொள்ளவேண்டும். நாங்கள் யாரையும் பழி வாங்கமாட்டோம். பொதுமக்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதில் அதிமுக தலையிடாது. கடந்த 4 மாதமாக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் 27 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு அது பென்சனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

   கடந்த சில வாரங்களாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் அமைச்சரோ, நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ தலையிடவில்லை. நல்லதை செய்யும் போது நாங்கள் குறுக்கிடமாட்டோம். உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக  வேண்டும். அதே போல் தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். தவறு செய்த உங்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். இனிமேல் வரும் 5 ஆண்டுகளில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து அதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி புத்துயிர் பெற்று செழிப்பு மிக்க மாநகராட்சியாக திகழ வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன் பேசினார். அப்போது தேமுதிக கவுன்சிலர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி விட்டது. எனவே எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு மேயர் தேன்மொழி அனுமதி மறுத்ததால் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்து, கூட்டம் முடிந்தது என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அதிமுக ,தேமுதிக எதிர்ப்பால் கூட்டம் பாதியிலேலே முடிந்தது. இதை தொடர்ந்து அதிமுக,தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு மேயர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டசெய்தி குறிப்பில் தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுத்த தகவல் எங்களுக்கு வரவில்லை.மேலும் இது உள்ளாட்சி சம்பந்தப்பட்டது. இதில் மாநில தேர்தல் கமிஷன்தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

 

திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்

 

மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள்,  அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆணையாளர் செபாஸ்டினுக்கு கொடுத்த போது வாங்கி கொண்டார். ஆனால் மேயரோ, துணை மேயரோ இனிப்பை வாங்க மறுத்துவிட்டனர். திமுக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கிய போது ஏய்யா எங்களை பாடாபடுத்திறீங்க என்று கூறியபடி இனிப்பை வாங்கமறுத்துவிட்டனர். இதே போல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் இனிப்பை வாங்கவில்லை. அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுக மண்டல தலைவர் நாகராஜனுக்கு இனிப்பை ஊட்டி விட்டது பார்ப்பதற்குஏ  வேடிக்கையாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago