முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா 2-வது நாளாக முழு அடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஜூலை- 7 - ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று 2-வது நாளாக முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, 11 மாவட்டங்கள் அடங்கிய தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தரவேண்டும் என்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பொழுது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டம் விஸ்பரூபம் எடுத்ததை அடுத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைத்திட மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தனித் தெலுங்கானா அமைப்பது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு மத்திய அரசுக்கு 6 விதமான யோசனைகளை கூறியது. அதன் பிறகும் கூட, தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன.
தனித் தெலுங்கானா அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கான பகுதியை சேர்ந்த  காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 104 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைபோல 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆந்திர மாநில அமைச்சர்கள் சிலரும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இணக்கமான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர (2 நாள்கள்) முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா அரசியல் போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. நேற்று முன்தினம் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 2-வது நாளாக நேற்று தெலுங்கான பிராந்தியத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வங்கிகள், தியேட்டர்கள், பெட்ரோல்-பங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் தெலுங்கானா பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஐதராபாத், செகந்தராபாத்தில் மட்டும் 10 ஆயிரம் அரசு போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தெலுங்கானா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சிங்கரேனி கொல்லியர்ஸ் சுரங்க கம்பெனியில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக பணிக்கு வராததால் நிலக்கரி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா போராட்டக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் கோதண்டராமை போலீசார் கைது செய்துள்ளனர். உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் கலை கல்லூரியிலிருந்து சட்டமன்றத்திற்கு அருகில் உள்ள  கன்பார்க் என்ற இடத்திற்கு உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்ததை அடுத்து சட்டமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் மூடிவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்