முக்கிய செய்திகள்

பாகிஸ்தானை தீவிரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.16 - தனது நாட்டு மண்ணை  தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று வலது கம்யூனிஸ்டு தேசிய தலைவர் டி.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து பெங்களூரில் வலது கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தான் அரசு  தனது நாட்டு மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும்  தீவிரவாதிகளை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு கடும்  கண்டனம் தெரிவித்துள்ள ராஜா,  தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் வலுவான மனோதிடத்துடன்  செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு தீவிரவாதிகள்  அண்டை நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா கொடுத்துள்ள தீவிரவாதிகளின் பட்டியலை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார்.

மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டதை போல இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க  தேவையில்லை என்றும் இந்த பேச்சு தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கும் தெற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் அமெரிக்கா தலையீடு தேவையில்லை என்றும் அப்படி தலையிட்டால் அது தேவையில்லாத பதட்டத்தை இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தி விடும் என்றும்  அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: