முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி இந்தியா வருகை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியாவுடன் இரண்டாவது கட்டமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உயர்மட்டக்குழுவுடன் நேற்று இரவு புதுடெல்லி வந்தார். மாறிவரும் உலக சூழ்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு கட்டாய தேவையாக மாறி வருகிறது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு இருந்து வருகிறது. அதேசமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த தொய்வு காலம் மாற மாற குறைந்து மீண்டும் நட்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்பட்டு வருகிறது. மேலும் இருநாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயத்தில் இந்தியாவில் மின்சார தேவை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க மரபு சாரா வழிமுறைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது. மேலும் இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதால் இதர உலக நாடுகளில் ஜனநாயகத்தை காப்பாற்ற காவலாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட இரு நாடுகளும் வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் ஆகிய துறைகளையும் தாண்டி இதர துறைகளிலும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியாவுக்கு நேற்று இரவு வந்தார். அவருடன் உயர்மட்டக்குழுவினரும் வந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அதிபர் ஒபாமாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க எரிசக்தி துறை துணை செயலாளர் டேனியல் போனிமேன், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை துணை செயலாளர் ஜனி லுதே மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் ஹில்லாரியுடன் வந்துள்ளனர். 

இன்று காலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை கிளிண்டன் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து அமெரிக்க உயர்மட்ட குழுவானது ஹில்லாரி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறது. இந்திய தரப்பில் எஸ்.எம். கிருஷ்ணா, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா, பிரதமரின் ஆலோசகர் டாக்டர் சம் பித்ரோடா,வெளியுறவு செயலாளர் நிரூபாமா ராவ், வெளியுறவு செயலாளர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ரஞ்சன் மதாய், வர்த்தகத்துறை செயலாளர்,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புலனாய்வுத்துறை இயக்குனர், மத்திய அரசின் இணை செயலாளர் ஜவெத் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது, கடந்த 13-ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் எல்லைப்பகுதி விவகாரம், சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் இருந்து சலுகை பெறுவது ஆகியவைகள் இடம் பெறும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஹில்லாரியும் எஸ்.எம். கிருஷ்ணாவும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஹில்லாரி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்